Sunday 12 August 2012

சீன ஜோதிடம் சாகசக்காரப் பாம்பு

சாகசக்காரப் பாம்பு
நேரம் : காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை
உரிய திசை : தெற்கு / தென்மேற்கு
உரிய காலங்கள் : வசந்த காலம் / மே மாதம்
நிலையான மூலகம் : நெருப்பு
யின்/யாங் யின்

http://th05.deviantart.net/fs14/300W/f/2007/004/a/7/Crystal_Snake_by_UdonCrew.jpgகடவுளர்கள் வைத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் எலி, எருது, புலி, முயல், டிராகன் ஆகியன முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தன. டிராகன் வந்து சேர்ந்த பின், குதிரையின் குளம்புச் சத்தம் கேட்டு கடவுளர்கள் அந்தப் பக்கம் பார்த்தனர். கரையை எட்டும் நேரத்தில் திடீரென குதிரையின் குளம்பிலிருந்து பாம்பு வெளிவந்தது. இதைக் கண்டு பயந்து பின்வாங்கியது குதிரை. போட்டியில் பாம்பு ஆறாம் இடத்தைப் பிடித்தது. கடவுளர்கள் அதை வாழ்த்தி, வருடச் சக்கரத்தின் ஆறாவது சின்னமாகத் தெரிவுசெய்தார்கள் என்பது கதை.

இது, பாம்பு ஏன் ஆறாவதாக வந்தது என்பது குறித்துக் கூறப்படும் கதை.

1905, 1917, 1929, 1941, 1953, 1965, 1977, 1989, 2001 ஆகிய வருடங்களில் பிறந்தவர்களும் 2013, 2025 ஆகிய வருடங்களில் பிறப்பவர்களும் பாம்பு வருடத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொடரைப் படிப்போர், தாங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை முந்தைய தொடர்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இப்போது தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட திகதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் பாம்பு வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பெப்ரவரி 04, 1905 - ஜனவரி 24, 1906
ஜனவரி 23, 1917 - பெப்ரவரி 10, 1918
பெப்ரவரி 10, 1929 - ஜனவரி 29, 1930
ஜனவரி 27, 1941 - பெப்ரவரி 14, 1942
பெப்ரவரி 14, 1953 - பெப்ரவரி 02, 1954
பெப்ரவரி 02, 1965 - ஜனவரி 20, 1966
பெப்ரவரி 18, 1977 - பெப்ரவரி 06, 1978
பெப்ரவரி 06, 1989 - ஜனவரி 26, 1990
ஜனவரி 24, 2001 - பெப்ரவரி 01, 2002

இனி, இந்தத் தொடரில், பாம்பு வருடத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஆழமான ஆற்றைப்போல், பாம்பு வருடத்தைச் சேர்ந்தவர்கள் மேலோட்டமாக அமைதியாகத் தெரிந்தாலும் அவர்களது எண்ணங்களும் உணர்வுகளும் மிகவும் ஆழமானது, ஆர்ப்பாட்டமற்றது. பாம்பு வருடத்தில் பிறந்தவர்கள் சாகசக்காரர்களாகவும் வசீகரம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர்கள். அவர்கள் எப்போதும் பூடகமானவர்கள். மென்மையானவர்கள். புத்தகங்களை விரும்பிப் படிப்பவர்கள். எல்லாக் கலைகளையும் போற்றுவார்கள். வாழ்க்கையின் மெல்லிய உணர்வுகளையும் ரசிக்க வல்லவர்கள். மற்ற எல்லோரையும்விடத் தங்கள் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் தவறு செய்வது மிகக் கடினம். மூடநம்பிக்கை கொண்டவர்கள். சந்தேகவாதிகள். மயக்கக்கூடியவர்கள்.

தந்திரவாதிகள். பேசுமுன் மிகவும் யோசித்தே பேசுவார்கள். அமைதியாகவும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் தன்மை கொண்டவர்கள். அடுத்தவர்களின் கவனத்தைப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் தங்கள் வேலையைக் கவனமாகச் செய்து, சாதிக்க வேண்டியதைச் சாதித்துக் காட்டுவார்கள். பாம்பு ஆண்டுக்காரர்கள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். ஒரு முறை தவறு செய்வது புரிந்துவிட்டால், அதைத் திரும்பவும் செய்யமாட்டார்கள். சத்தியம் தவறுதலை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தோல்வியை வெறுப்பவர்கள். பண விடயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் பணத்தைச் சேமிப்பவர்கள். சிக்கனமாகவும் கவனமாகவும் அதைப் பாதுகாப்பர். நண்பர்களுக்குக் கடன் கொடுக்கப் பெரிதும் தயங்குவார்கள். ஆனால் ஆனால் அவர்களின் அவசியத்திற்கு உதவத் தயங்கமாட்டார்கள். கஷ்டப்படுபவர்களைக் கண்டால் மனமிரங்கி, தன்னால் ஆனதைச் செய்வார்கள். மிகவும் முக்கியமான விடயங்களில், அடுத்தவர்களின் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் நம்பாமல், தங்களது மனம் காட்டும் பாதையின் மேல் அதிக நம்பிக்கை வைத்துச் செயற்படுவார்கள். தான், தனது எண்ணம், தனது செயல் என்று இருப்பவர்கள். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்நோக்கும்போதும் தங்களது ஆழ்மனதின் முடிவுகளை ஏற்றுச் செயற்பட்டு, அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க வழி தேடுவார்கள்.

பாம்பு ஆண்டைச் சேர்ந்தவர்கள், மனதில் ஆழ்சிந்தனையும், இயற்கையில் பொறாமை குணமும் கொண்டவர்களாயினும், விலக்கப்பட்டால், அதை ஏற்க முடியாத தன்மையையும் கொண்டவர்கள். தாம் நம்பியவர்களும் அன்புகொண்டவர்களும் ஏமாற்றும்போது அதிக வேதனைக்குள்ளாவர்கள்.

இயற்கையாகவே எதையும் கூர்ந்து நோக்குவார்கள். ஆனாலும் சந்தேகங்களைப் பகிர்ந்துகொள்ளாமல், தங்களுக்குள்ளாகவே வைத்துக் கொள்வார்கள். அடுத்தவர் விடயங்களில் தலையிடுதலை விரும்பாதவர்கள். ஊர் வம்பு பேசுவது இவர்களுக்குப் பிடிக்காத விடயம். இவர்களைக் கோபம் கொள்ள வைத்தால், வார்த்தைகளால் கத்தாமல் அமைதியாக இருப்பதைக் காணலாம். இவர்கள் வஞ்சம் வைத்துக் கவிழ்க்க நேரம் பார்த்துக் காத்திருக்க வல்லவர்கள்.

பாம்பு ஆண்டுக்காரர்கள் அழகாக உடையலங்காரம் செய்துகொள்வார்கள். நன்னடத்தை உடையவர்கள். முன் ஜாக்கிரதைக்காரர்கள். அமைதியாகவே காணப்படுவார்கள். தங்கள் உண்மை உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடப்பார்கள். இவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும். கஷ்டமான சூழலிலும் இந்த உணர்வால், சூழலை அனுகூலமாக்க வல்லவர்கள். தங்களைக் கஷ்டத்திற்கு உட்படுத்திக் கொண்டாலும் தங்கள் பளிச்சிடும் எண்ணங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவர்களின் பலமுள்ள தூண்களைப் போன்ற எண்ணங்கள், இவர்களுக்குக் குழப்பக் காலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும் நேரத்திலும் கவனமாகச் செயற்பட வைக்கும். இவர்கள் தங்களைப் பற்றிய அருமையான எண்ணங்கள் கொண்டவர்கள். விலைமதிப்புள்ள பொருட்களை விரும்பாதவர்கள்.

போலிகளை விரும்பாமல் உண்மையான, நல்ல பொருட்களை வாங்கிக்கொள்ள விரும்புவார்கள். பாம்பு ஆண்டுக்காரர்கள் அதிகாரத்தைப் பெரிதும் விரும்புவார்கள். தங்களைச் சுற்றி வெற்றியாளர்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். இவர்களை அதிர்ஷ்டமும் புகழும் தானே தேடிவரும்.புத்திசாலித்தனம், நன்னடத்தை, பொருள் மேல் பற்று என்ற குணங்கள் குறிப்பிடத்தக்கவை. முடிவுகள் எடுக்க வேண்டிய நேரங்களில், அவர்கள் சரியாக யோசித்துச் செயற்படுவார்களேயொழிய, தவறான சூழலை உருவாக்கிக்கொள்ளும் வகையில் முடிவுகளை எடுக்க மாட்டார்கள். தனக்கு வேண்டுவனவற்றைப் பெற, செய்யவேண்டியதைச் செய்து, அச்செயலை முடிக்க வல்லவர்கள்.
வாழ்க்கையில் பெற வேண்டிய அனைத்துப் பொருட்களையும் தங்களைச் சுற்றி வைத்துக்கொள்ள விரும்பும் பொருளாசை கொண்டவர்கள் இவர்கள் என்பதை, இவர்களது இல்லங்களைக் காணும்போது அறிந்துகொள்ளலாம். மிகவும் ஆடம்பரமான பொருட்களால் வீட்டை அலங்கரித்து, அமைதி தேட விரும்புவார்கள். தொழில்பலவிதமான திறமைகளும் இயல்பான தன்மைகளும் இவர்களைத் தலைமை நிலைக்கு உயர்த்த வல்லவை. பாம்பு ஆண்டுக்காரர்களை நன்கு புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் மக்கள் இவர்களைக் கண்டு பிரமிப்பார்கள். இவர்கள் சிறந்த அரசியல்வாதிகளாகத் திகழமுடியும். அவர்கள் எதை வேண்டுமானாலும் பேரம் பேச வல்லவர்கள்.
என்ன நடந்தாலும் தாங்களாகவே எந்தச் செயலையும் செய்ய முயல்வார்கள். இவர்களுக்கு மனிதர்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரியும். இவர்கள் செய்யும் செயல்கள் பலவும் முன்பே திட்டமிடப்பட்டவையாக இருக்கும். தங்கள் பதவியைக் கடைசிவரை தக்கவைத்துக்கொள்ள முயல்வார்கள். அதிக வேலை செய்ய விரும்பாமல், செய்யத் தகுந்த மிதமான வேலைப்பளுவை விரும்பும் தன்மை கொண்டவர்கள்.இவர்களுக்குப் பணம் ஒரு பெரும்பாடாக இருக்காது. பணம் தேவைப்படும்போது, தவறாமல் கிடைத்துவிடும். பண விடயத்தில் அதிர்ஷ்டம் இருந்தபோதும் அவர்கள் சூதாட்டத்தில் நாட்டம் வைத்தல் ஆபத்தை விளைவிக்கும். பெருத்த நஷ்டத்தைப் பார்க்க வேண்டி வரும்.
கடின உழைப்பாளிகளாக இருந்தாலும் அடிக்கடி வேலை மாற்றம் செய்யும் தன்மை கொண்டவர்கள். ஒரே மாதிரியான வேலை செய்வதால், வேகமாகச் சோர்வு அடைந்து, அடுத்த வேலையைத் தேட ஆரம்பிப்பார்கள். இவர்கள் படைப்பாளிகளாகவும் மிகுந்த சுறுசுறுப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வல்லவர்கள். மிகவும் இறுக்கமான சூழலிலும் வாழத் தெரிந்தவர்கள். விஞ்ஞானி, ஓவியர், பானை வனைஞர், ஆசாரி, சோதிடர், ஜாலவித்தைக்காரர், சமூக ஆய்வாளர், எழுத்தாளர், தத்துவஞானி, ஆசிரியர் போன்ற வேலையில் சிறந்த நிலையை அடைய முடியும். வியாபார விவகாரங்களில் பாம்பு ஆண்டுக்காரர்கள், தங்கள் சாதனைகளை அடுத்தவர்கள் மதிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். வியாபார விடயங்களில் எச்சரிக்கை அதிகம் தேவை.

உறவு
பாம்பு ஆண்டுக்காரர்கள் உறவுகளைச் சொந்தம் கொண்டாடத் தயங்க மாட்டார்கள். இவர்கள் தீவிர காதலர்களான போதும் பொறாமை மிக்க காதலர்கள். தங்கள் குறிக்கோளை அடைய எவ்வளவு தூரம் செல்வார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. இரக்கமற்றவர்கள். அவர்களது மூளை கணிப்பொறி வேகத்தில் சதியாலோசனை செய்துகொண்டேயிருக்கும். தங்களது துணைகளை மிகவும் மதிப்புக் கொடுத்து சொந்தமாக்கிக்கொள்ள எண்ணுவார்கள். அதில் பொறாமையும் கொள்வார்கள். இவர்களே உறவுகளை எந்த அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்பவர்கள். தன்னுடைய துணையைத் தேர்வு செய்த பின்னரே, இவர்களது மறுபக்கத்தைக் காட்டுவார்கள்.

இவ்வாண்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் உணர்வுகளை அதிகமாக வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களுக்குள்ளாகவே வைத்துக்கொள்வார்கள். எப்போதும் அவர்களை ஏமாற்ற எண்ணாதீர்கள். ஏனென்றால் அதைத் திருப்பிக்கொடுக்கும் சமயம் கிடைக்கும்வரை மறக்கமாட்டார்கள்.

சுகாதாரம்
அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். சத்தத்தை விரும்பாமல் அமைதியை விரும்பும் மனம் உடையவர்கள். எளிதில் மன அழுத்தமடைவர். அமைதியான வாழ்க்கைப் போக்கு இல்லையென்றால் வருந்தி அழுத்தம் கொண்டு தவிப்பர். அப்படி அதிகமாக வேலை செய்துவிட்டால், அவர்கள் வாழ்நாள் குறையும் தன்மை ஏற்படலாம்.

பாம்பு வருடத்தைச் சேர்ந்த பிரபலங்கள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மகாத்மா காந்தி, எம்.ஜி.ஆர்., கிரிக்கெட் வீரர்கள் மஹேல ஜயவர்தன, அரவிந்த டி சில்வா, நடிகர் ஷாருக் கான், கவிஞர் வைரமுத்து, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோன் எப்.கென்னடி, ஓவியர் பப்லோ பிக்காஸோ, அமெரிக்க அரசியல்வாதி டிக் சென்னி, அமெரிக்கப் பாடகர் பொப் டைலன்.

அதிர்ஷ்ட எண்கள்:
1, 2, 4, 6, 13, 24, 42, 46

ஒத்துப்போகும் விலங்குகள்: சேவல், எருது

ஒத்துப்போகாத விலங்குகள்: பன்றி, குரங்கு

பாம்பு ஆண்டைச் சேர்ந்தவர்கள், ஐந்து மூலகங்களுடன் சேரும்போது வெவ்வெறு குணங்களைப் பெறுவதாக சீன சோதிடம் நம்புகிறது.

நெருப்பு பாம்பு
பெப்ரவரி 10, 1929 - ஜனவரி 29, 1930
பெப்ரவரி 06, 1989 - ஜனவரி 26, 1990

குணங்கள்
தன்னம்பிக்கை, வளைந்துகொடுக்காத தன்மை, பதவி மற்றும் பலம் காரணமாக ஊக்கம் பெறும் தன்மை கொண்டவர்கள். வெளிப்படையானவர்கள். எப்போதும் தங்களது கருத்துக்களையும் தங்கள் மனதில் தோன்றுவதையும் மாற்றாரிடம் சொல்லிய வண்ணம் இருப்பர். அனைவரும் இவர்களின் பேச்சைக் கேட்டு மகிழ்வர். இவர்கள், தாங்கள் சொல்வதே சிறந்தது என்று நம்பவைக்கும் சொல் வன்மை கொண்டவர்கள்.

மரப்பாம்பு
ஜனவரி 23, 1917 - பெப்ரவரி 10, 1918
பெப்ரவரி 18, 1977 - பெப்ரவரி 06, 1978

குணங்கள்
இரக்க மனம், உண்மை, ஸ்திரத்தன்மை, பகுத்தறிவு, வசீகரம் என்பன இவர்களின் இயல்பான குணங்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சிறந்த, பலமான உறவுகொண்டு, அவர்களுடன் இருப்பதையே பெரிதும் விரும்புவர். எவ்வளவு ஆதரவு இருந்தபோதும் மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது மிகவும் அரிது.

மண்பாம்பு
ஜனவரி 27, 1941 - பெப்ரவரி 14, 1942
ஜனவரி 24, 2001 - பெப்ரவரி 01, 2002

குணங்கள்
அமைதி, திருப்தி, தோழமை, ஆழ்ந்த அறிவு என்பன உடையவர்கள். ஆலோசனை பெறத் தகுந்தவர்கள். கடின உழைப்பால் வாழ்க்கையில் நல்ல பலன்களை அடைவர். தங்களின் ஆராய்ந்து உணரும் அறிவின் மேல் அதிகம் நம்பிக்கை வைத்து அதைச் சார்ந்து இருப்பர். நம்பிக்கைக்கு உகந்தவர். நம்பத் தகுந்தவர்.

உலோகப் பாம்பு
பெப்ரவரி 14, 1953 - பெப்ரவரி 02, 1954

குணங்கள்
எச்சரிக்கைத் தன்மை, திட்டமிடும் தன்மை மற்றும் சுறுசுறுப்புக் கொண்டவர்கள். நம்ப முடியாத அளவிற்கு குறிக்கோள் நோக்கியே இவர்களது எண்ணம் இருக்கும். தங்களுக்குக் கிடைக்க வேண்டியதை எந்தத் தடை வந்தபோதும் பெறும் முயற்சி இவர்களிடத்தில் உண்டு. தோல்வி என்பது இவர்களின் அகராதியிலேயே கிடையாது. பணத்தைக் கொண்டு தங்களுக்கென தொடர்ந்து எதையேனும் வாங்கிய வண்ணம் இருப்பர்.

நீர்ப் பாம்பு
பெப்ரவரி 04, 1905 - ஜனவரி 24, 1906
பெப்ரவரி 02, 1965 - ஜனவரி 20, 1966

குணங்கள்
பணத்தின் மீது பற்று, ஆழ்ந்த சிந்தனை மற்றும் பொறுமை உடையவர்கள். செல்வாக்கு, ஊக்கம், கூரிய அறிவு என்பன இவர்களின் குணத்தைக் குறித்துச் சொல்லப்படும் வார்த்தைகள். குழு உறுப்பினராக இருந்தால் சிறந்த முறையில் பணி செய்வர். கவனிப்பையும் பாராட்டையும் எதிர்பார்ப்பர். மிக நெருக்கமானவர்களிடம் மட்டுமே தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வர். நீங்கள் பாம்பு வருடத்தில் பிறந்திருந்தால், மேற்சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர்.
பாம்பு வருடம், மாற்றங்கள் பலவற்றைக் கொண்டு வரும். முயற்சிகளும் யோசனைகளும் அதிகமாக இருக்கும். அமைதியாகப் பல புதிய புதிய விடயங்கள் கண்டுபிடிக்கப்படும். ஆனால் அமைதியான வருடமாக இருக்காது. மிகவும் கடினமான சூழல், வேற்றுமைகள் தீர்க்கப்படாத காரணங்களால் போர், போராட்டங்கள் அதிகமாக இருக்கும். பாம்பு வருடம் மிகவும் எதிர்மறையான சக்திகளை உருவாக்கும் வருடம்.

No comments:

Post a Comment