Monday 20 August 2012

சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்




1. தலை - ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

2. நெற்றி - அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப்பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

3. கண் - ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

4. மூக்கு - உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

5. வாய் - அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்.

6. உதடு - உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

7. கழுத்து - ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.

8. தோள் - தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

9. நாக்கு - நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

10. பல் - மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்.

11. காது - காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

12. கைகள் - நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

13.மணிக்கட்டு - மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

14. விரல்கள் - கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

15. மார்பு - ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் முலைக்காம்புகள் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் காம இச்சை அதிகம் இருக்கும்.

16. வயிறு - பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

17.முதுகு - சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமாகும்.

18. கால்கள் - கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

19. கால்பாதம் - கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.

No comments:

Post a Comment