Monday 13 August 2012

சீன ஜோதிடம் எலி வருடம்

எலி வருடம்
http://christopherramey.files.wordpress.com/2009/01/rat.jpg
புத்த பெருமானின் அழைப்பையேற்று, அவரைப் பார்க்கச் செல்ல பன்னிரண்டு மிருகங்கள் மட்டுமே உறுதிபூண்டன. கூட்டம் நடப்பதற்கு முந்தைய நாள் பூனை தன்னுடைய நண்பனான எலியிடம் பேசி, மறுநாள் அதிகாலையில் முதலில் எழுபவர், அடுத்தவரை எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு தூங்கச் சென்றது.

காலையில் எலி முதலில் எழுந்தது. ஆனால் தான் முதலாவதாகச் செல்லவேண்டும் என்றெண்ணிய எலி, பூனையை எழுப்பாமல் கூட்டத்திற்குச் சென்றது. அதுவே கூட்டத்தின் முதல் ஆளாகவும் இருந்தது. பிறகு எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, சேவல், நாய், பன்றி என்று ஒன்றன்பின் ஒன்றாக விலங்குகள் வந்து சேர்ந்தன. காலையில் பூனை எழுந்து பார்த்தபோது, அங்கு எலி இருக்கவில்லை. வேக வேகமாகக் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றது. ஆனால் அது சென்று சேரும்போது கூட்டமே முடிந்து விட்டது. அன்றிலிருந்துதான் எலி, பூனைக்குப் பகையானது.

இந்தக் கதை எலி வருடம் ஏன் முதலில் வந்தது என்பதைக் குறிக்க கூறப்படும் கதை.
900, 1912, 1924, 1936, 1948, 1960, 1972, 1984, 1996, 2008, ஆகிய வருடங்களில் பிறந்தவர்களும் 2020, 2032, 2044 ஆகிய வருடங்களில் பிறப்பவர்களும் எலி வருடத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் எலி வருடத்தைச் சேர்ந்தவர்களா என்பதை இப்போது தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட திகதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் எலி வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஜனவரி 31, 1900 - பிப்ரவரி 19, 1901
பிப்ரவரி 18, 1912 - பிப்ரவரி 06, 1913
பிப்ரவரி 05, 1924 - ஜனவரி 24, 1925
ஜனவரி 24, 1936 - பிப்ரவரி 10, 1937
பிப்ரவரி 10, 1948 - ஜனவரி 28, 1949
ஜனவரி 28, 1960 - பிப்ரவரி 14, 1961
பிப்ரவரி 15, 1972 - பிப்ரவரி 02, 1973
பிப்ரவரி 02, 1984 - பிப்ரவரி 19, 1985
பிப்ரவரி 19, 1996 - பிப்ரவரி 06, 1997
பிப்ரவரி 07, 2008 - ஜனவரி 25, 2009

இனி, எலி வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்கள் பற்றிப் பார்ப்போம்.

பெரும்பாலான மக்களுக்கு எலியைப் பிடிக்காது. இருந்தாலும் சீன ஜோதிடத்தில், எலியே முதல் வருடத்தின் சின்னமாகும். ஆர்வம், சாதுரியம், எச்சரிக்கைத் தன்மை, மென்மை, இணக்கம், உற்சாகம் ஆகிய குணங்களுக்குச் சான்றாக விளங்கும் விலங்கு எலி.

எலி வருடத்தில் பிறந்தவர்கள் வசீகரமும் போராடும் மனப்பான்மையும் கொண்டவர்கள். நிகழ்காலத்தில் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எந்தச் சூழலையும் தமக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு வாழத் தெரிந்தவர்கள். சாதாரணமாகப் பார்க்கும்போது மிகவும் அமைதியாகவும் எந்த விடயத்தையும் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுவராகத் தெரிந்தாலும், உள்மனதில் அவர்கள் அமைதியற்றவர்களாகவும், சிறிது பயந்த சுபாவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

எலியாண்டுக்காரர்கள் எளிதில் எதற்கும் ஒத்துப் போகக்கூடியவர்கள். கடின உழைப்பில் அதிக நாட்டம் கொண்டவர்கள். காரியங்களை ஆரம்பித்தவுடன், தான் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் அறிந்துவிட்டார்கள் என்றால், அதற்குப் பிறகு அவர்களை நிறுத்தவே முடியாது. எந்தச் செயலை ஆரம்பித்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார்கள். சுற்றிப் பலர் இருந்தபோதும், தன் வேலையைத் திறமையாகச் செய்ய வல்லவர்கள்.

சங்கடங்கள் ஏற்படும்போது அவற்றை மிகத் திறமையாகக் கையாள வல்லவர்கள். கொக்கைப் போல் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்து தங்கள் வாழ்க்கையில் முன்னேறத் தெரிந்தவர்கள். அவர்கள் இயற்கையிலேயே உடலில் அபாய மணியை வைத்திருப்பவர்கள். துன்பம், வரும் முன் காக்க, செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய முயல்வார்கள்.

வெளி விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்துவார்கள். பிறருக்கு அறிவுரை கூறுவதில் வல்லவர்கள். ஆனால் தங்கள் பிரச்சனைகளை அடுத்தவர்களிடம் சொல்லத் தயங்குவார்கள். அதனால் மற்றவர்கள் வாழ்க்கைச் சிக்கல்களில், இவர்களும் சிக்கித் தவிப்பார்கள். எலியாண்டுக்காரர்கள் பணத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கால் காசுக்கும் கணக்கு பார்க்கும் தன்மை கொண்டவர்கள். எலியாண்டுக்காரர்களையும் பணத்தையும் பிரிப்பது மிகக் கடினம்.

எலியாண்டுக்காரர்களுக்கு பேரம் பேசுவது மிகவும் பிடிக்கும். அவர்கள் தேவையற்ற பொருட்களையும், மலிவாகக் கிடைக்கிறதென்றால் வாங்கி விடுவார்கள். நினைவுப் பொருட்கள் அவர்களிடம் நிறையவே இருக்கும். பண விடயங்களில் அதிக கவனம் தேவை. சில சமயம் அவர்களின் கணிப்புகள் பொய்த்துப் போனால் அது அதிக நட்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். மாலையில் பிறந்த எலியாண்டுக்காரர்களுக்கு காலையில் பிறந்தவர்களை விடவும் சற்றே கடினமான வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டிவரும்.

தொழில்
எலியாண்டுக்காரர்கள் அதிபுத்திசாலிகள். ஞாபசக்தி மிக்கவர்கள். எதையும் எளிதில் கற்க வல்லவர்கள். உண்மையானவர்கள். அதிகம் படிக்க விரும்புவார்கள். தங்களைப் பற்றி அழகாகக் கூறவும் எழுதவும் செய்யத் தகுந்தவர்கள். துறு துறுவென எதையாவது தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள். எலியாண்டுக்காரர்கள் இரகசியங்களைக் கட்டிக் காப்பதில் கைதேர்ந்தவர்கள். அடுத்தவர்களின் இரகசியங்களை அறியும் ஆர்வம் அவர்களிடத்தில் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக, அவர்கள் தேர்ந்த எழுத்தாளர்களாக இருப்பார்கள்.

அவர்கள் இருக்கும் இடத்தில் அவரைப் போற்றும் கூட்டத்தவர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அவர்கள் மனதிற்கு பிடித்தமானவர்களாக இருப்பார்கள். எப்போதும் பளிச்சென்று மகிழ்ச்சியுடன் இருக்கும் உருவ அமைப்பைப் பெற்றவர்கள். அதனால் அவர்கள் சமுதாயத்தில் மிகவும் போற்றத்தக்கவர்களாகவும், அதிகமான வேலை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு கூட்டங்களுக்குச் செல்லவும் விழாக்களுக்குச் செல்லவும் மிகவும் பிடிக்கும். அவர்கள் தனித்துவம் வாய்ந்த குழுக்களில் இருக்க விரும்புவார்கள். அவர்களுக்குப் பல இரகசிய உளவாளிகள் இருப்பார்கள். எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் அதிக ஈடுபாடு இருக்கும்.

மிகுந்த புத்திக்கூர்மை, எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை காரணமாக அவர்கள் உயர்ந்த பதவிகளை அடைய முயலலாம். அவர்களது குணம் காரணமாகவும், சரியான முடிவு எடுக்கும் தன்மை காரணமாகவும், பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணும் திறம் பெற்றவர்கள். அதனால் உயர்பதவிகளுக்குக் குறி வைக்கலாம். அது மதிப்பையும் செல்வாக்கையும் பெற்றுத்தரும். அவர்கள் நல்ல எஜமானர்களாகவும் இருப்பார்கள். புதிது புதிதான காரியங்களைச் செய்ய விரும்புகிறவர்கள். அதனால் இசை வல்லுநர்கள், நகைச்சுவை வித்தகர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், கார் பந்தய வீரர்கள், ஆராய்ச்சியாளர்கள், இயக்குநர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் என இருக்க முயலலாம். இவற்றில் அவர்கள் பிரகாசிக்க அதிக வாய்ப்புகள் கிட்டும்.

உறவு
உறவினர்கள் விடயத்தில் அவர்கள் மிகவும் தயாள குணம் மிக்கவர்கள். உறவினர்களை எப்போதும் ஆதரிக்க எண்ணுவார்கள். பெற்றோருக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள். தங்கள் குழந்தைகளின் மேல் பாசம் மிகக் கொண்டவர்கள். அவர்களுக்கு குடும்பம், வீடு, மனைவி, மக்கள், மிகப் பிடித்தமான விடயங்கள் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அவர்கள் தங்களைச் சுற்றிலும் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் காரணத்தால், எப்போதுமே புதிய புதிய மனிதர்களைச் சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் உறவுகளைத் துண்டிக்க விரும்பமாட்டார்கள். அதனால் சில நேரங்களில் புதிய நட்புகளை ஏற்கத் தடைகள் ஏற்படும். எலியாண்டுக்காரர்களுடன் நட்பு வைக்க விரும்புபவர்கள். அவர்களுக்கு இணையாக சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்வது நலம்.

சுகாதாரம்
எலியாண்டுக்காரர்களின் உடல் நிலை பொதுவாக நன்றாகவே இருக்கும். அவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும் காரணத்தால், தங்கள் உடல் நிலையை நல்ல படியாகவும், நோய்களை எதிர்த்துப் போராடும் வகையிலும் வைத்துக் கொள்வார்கள். எலியாண்டுக்காரர்கள் சஞ்சலமாக இருக்கும் சமயத்தை எளிதாகக் கண்டு கொள்ளலாம். அந்த சமயங்களில் மிகவும் அமைதியற்றவர்களாகவும், கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். அத்தகைய நேரங்களில் மன அழுத்தத்தால் தவிப்பார்கள். மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளுதல் நலம்.

மற்றொரு குறையும் அவர்களிடத்தில் உண்டு. ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபடுவதே ஆகும். தங்கள் சக்தியினைப் பல காரியங்களில் விரயம் செய்து அவற்றை முடிக்க முடியாமல் தவிப்பார்கள். இது உடலுக்கும் கேடு விளைவிக்கும்.

எலி வருடத்தைய பிரபலங்கள் :-
கலைஞர் கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, சர்.சி.வி.இராமன், டாக்டர். இராதா கிருஷ்ணன், ஹேமமாலினி, முத்தையா முரளிதரன், நாமக்கல் கவிஞர் இராமலிங்க பிள்ளை, ராஜ்கபூர், ராகேஷ் சர்மா, சௌரவ் கங்குலி, வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜார்ஜ் வாஷிங்டன், உல்ப்காங்.

அதிர்ஷ்ட எண்கள் :- 1,4,5,10,11,14, 41,45,51,54.

ஒத்துப் போகும் விலங்குகள் :- டிராகன், எருது, குரங்கு

ஒத்துப் போகாத விலங்குகள் :- குதிரை, முயல், சேவல், ஆடு

மூலகக் குணங்கள்:-
எலிவாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும்போது, வௌ;வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன ஜோதிடம் நம்புகிறது.

நெருப்பு எலி:-
(ஜனவரி 24, 1936 - பிப்ரவரி 10, 1937
பிப்ரவரி 19, 1996 - பிப்ரவரி 06, 1997)

குணங்கள்: ஆக்ரோஷம், சுறுசுறுப்பு, போட்டிகளை எதிர்கொள்ளும் தன்மை, சுய நம்பிக்கை, கொள்கைப் பிடிப்பு.

மர எலி:-
(பிப்ரவரி 05, 1924 - ஜனவரி 24, 1925
பிப்ரவரி 02, 1984 - பிப்ரவரி 19, 1985)

குணங்கள்: ஆவல், உள்ளுணர்வு, எளிதில் புரிந்துகொள்ளுதல், சூழலுக்கேற்ப மாறுதல், சிரத்தை.

பூமி எலி:-
(பிப்ரவரி 10, 1948 - ஜனவரி 28, 1949
பிப்ரவரி 07, 2008 - பிப்ரவரி 25, 2009)

குணங்கள்: நம்பிக்கை, தெளிவாக ஆராய்ந்து முடிவு எடுத்தல், மாறுதல்களில் விருப்பம், தூய்மை.

உலோக எலி:-
(ஜனவரி 31, 1900 - பிப்ரவரி 19, 1901
ஜனவரி 28, 1960 - பிப்ரவரி 14, 1961)

குணங்கள்: எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, உயர்ந்த கொள்கையுடன் இருத்தல், எண்ணங்களால் தன்னைத்தானே ஊக்குவித்தல், எதையும் விட்டு கொடுக்காமை.

நீர் எலி:-
(பிப்ரவரி 18, 1912 - பிப்ரவரி 06, 1913
பிப்ரவரி 15, 1972 - பிப்ரவரி 02, 1973)

குணங்கள்: விவேகம், ஞானம், கல்வியால் ஊக்கம், எளிதில் புரிந்துகொள்ளுதல் போன்ற குணங்களைக் கொண்டவர்கள்.

நீங்கள் எலி வருடத்தில் பிறந்திருந்தால், மேற்சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர்.

No comments:

Post a Comment