Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 188


கேளப்பா குருபதியும் மூன்றிலேறக்
கெடுதிமெத்த செய்வனடா வேந்தன் தானும்
ஆளப்பா அகத்திலே களவு போகும்
அப்பனே அரிட்டமடாச் சிசுவுக்கேதான்
கூளப்பா குவலயங்களெல்லா மாண்ட
குற்றமிலா காந்தா ரிமகனும் வானும்
வீளப்பா வீமன்கை கெதையினாலே
விழுந்தானே மலைபோலே சாய்ந்தான் சொல்லை.


வேறொன்றையும் கூறுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக! வேந்தன் எனப்படும் குருபகவான் கோட்சாரத்தில் மூன்றாமிடத்தை அடைந்தால் அவனால் மிகுந்த கேடுண்டாகும். இச்சாதகனின் மனையில் களவு போதலும் மற்றும் வெகுவான துர்ப்பலன்களூம் ஏற்படும். அவ்வளவு ஏன்? உலகமெல்லாம் ஆண்ட ஒரு வகையான குற்றமும் இல்லாத காந்தாரியின் மகனான துரியோதனன் பீமன் கை கதையாலே மடிந்து மலைபோல் சாய்ந்தவனே இதனையே உதாரணமாகக் கொள்க என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment